எண் மூன்று

பிறந்த தேதிகள்  3, 12, 21, 30

பொதுவான குணங்கள்

தனக்கு மேலானவர்களின் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு உண்மையுடன் சலிக்காமல்  உழைப்பார்கள். இவர் களுக்கு இயல்பாகவே அடக்கம். பொறுமை, பெரியோருக்குக் கீழ்ப்படிதல் முதலிய குணங்கள் அமைந்திருக்கும்.

“மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்” என்றிருப்பர்.எல்லாக் காரியங்களிலும் நம்பக்கூடியபடி நாணயமாகவே நடந்து கொள்வார்கள். கௌரவத்தையும் நல்ல பெயரையும் உயிருக்கும் மேலாக மதிப்பவர்கள் இவர்களே. தான் தன்னைவிட பெரியோருக்கு அடங்கி நடப்பது போலவே தனக்குக் கீழே இருப்பவர்களும் நடக்க வேண்டுமென விரும்புவர். இவர்கள் பெருத்த உழைப்பாளிகள். மற்றவர்களை அதிகாரம் செய்யும் போது மிகவும் கடினமான சித்தம் உடையவர்கள் போலத் தோற்றும் இவர்கள் உண்மையில் பொன்னான இருதயம் படைத்தவர்கள். பிறர் கஷ்டம் கண்டு உருகும் இயல்பினர். நியாயமான முறையிலேதான் எதையும் செய்வார்கள் ஆழ்ந்த மதப் பற்றுடைய இவர்கள் எந்த மதத்தினராகப் பிறந்தாலும் ஆச்சார  சீலராகவே காணப்படுவர். பழைய கொள்கைகளிலும் பழக்கங்களிலும் நம்பிக்கை உடைய இவர்கள் புதிய விஷயங்களுக்கோ, நாகரீக மாறுதல்களுக்கோ எளிதில்  உடன்பட மாட்டார்கள். நாகரீக பெண்களுக்கு  இவர்கள் “பத்தாம் பசலி” யாகவே தோன்றுவர். முன்னோர்களையே பின்பற்றி நடப்பார்கள்.

தன்னிஷ்டப்படி ஒரு காரியத்தை செய்வதென்பது இவர்களிடம் கிடையாது. எப்படிச் செய்ய வேண்டியது நியாயமோ அப்படியே செய்வார்கள். எல்லோருக்கும் உதவ விரும்பும் இவர்கள் பிறரிடம் ஒரு உதவியும் கோரமாட்டார்கள். கௌரவத்தை விட்டுக் கொடுக்க விரும்பாமல் கஷ்டங்களைப் பிறர் உதவியின்றிச் சமாளிப்பதால்ஆனால் இவர்கள் கர்வம் உடையவர்  அல்லர். சொந்த வேலைகளைவிடப் பொதுக் காரியங்களில் இவர்களுக்கு ஆர்வம்  அதிகம் உண்டாகும். இலாபம் ஏதுமில்லாத பொதுக் காரியங்களில் இவர்களைக் காணலாம். இவர்கள் இடைவிடாத முயற்சியாலும், மேலான குணங் களாலும் உயர் பதவிகளை அடைகின்றனர். இவர்களில் மிக உன்னதமான நிலைகளில் உள்ளவர்கள் வாழ்க்கையை உற்று நோக்கினால் எவரும் இவர்களை அதிர்ஷ்டசாலிகள்என்று சொல்ல மாட்டார்கள். திறமைக்கேற்ற பதவி என்றே தோன்றும். படிப்படியாகவே வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். சக்திக்கு மிஞ்சிய  பதவிக்கு ஒருநாளும்  ஆசைப்படமாட்டார்கள். எந்த நிலையில் இருந்தாலும் திருப்தியுடன் உண்மையாகப் பணியாற்று வார்கள். இவர்களைத் தன்னம்பிக்கை உடையவர்கள் தன்நம்பிக்கை இல்லாதவர்களென்று இரு பிரிவாகப் பிரிக்கலாம். உடையவர்கள் தான் சரியென்று எண்ணும் எதையும் கூசாமல் பகிரங்கப் படுத்தி ஆதரவு தேடுவர். பிறரிடம் ஒருகாலும் யோசனை கேட்க மாட்டார். தீர்மானித்த பின்னர் எக்காரியமாயினும் எதிர்ப்பு ஏற்பட்டாலும் சிறிதும் பொருட்படுத்தாமல் தீவிரமாக காரியத் தில் இறங்கி விடுவார்கள் பின்வாங்கமாட்டார்கள். விரோதிகள்  எப்படிப் பட்டவர்களானாலும் அஞ்சாமல் போர் புரிவர். போரிலும்  தோல்வியை விட மரணமே மேலானதென்று மதிப்பவர்களாவர்.

மேன்மையான இலட்சியங்களால்  கவரப்பட்டு வாழ்க்கையை இலட்சியவாதியாக  இருந்து நடத்துவார்கள். இலட்சியத்திற்கு  சகலத்தையும் துறக்கவும் முன்வரும் இவர்களே மனிதரில் தேவர் என்று போற்றத்தகுந்தவர்கள். தன்னம்பிக்கையில்லாதவர்களோ குடும்பத்தில் மூத்தோர்கள் சொல்லுக்கு பால்யத்தில் கட்டுப்பட்டு மனதில் தோன்றும் தீவிரமான எண்ணங்களை நசுக்கிவிடுவர். வயது வந்த பின்னர் சுதந்திரம் இருந்தாலும் குடும்பக் கடமை களும் பாசமும் இவர்களைத் தியாகப் பாதையிலே செல்வ மனிதராக்கிவிடும். முடிவில் இவர்களுக்குக் கண்ணியமான பெயர் மாத்திரம் உடையவராய் புகழையோ. பெரும் பதவியையோ எதிர்பாரா மலே உழைக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். இவர்களே உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத தொழில்களில் ஈடுபட்டு உலகம் சரிவர நடக்க உதவுகின்றனர்: குமாஸ்தாக்கள். காரியதரிசிகள் (இவர்களைக் காரியதரிசிகளாக வைத்துக் கொண்டே அநேக பிரமுகர்கள் பிரமிக்கத் தகுந்த அறிவாளிகள் போல் காட்டிக்கொள்கின்றனர்)  சாதுவான மனிதர்களாகக் காணப்படுகின்றவர்களும் இவர்களே, பிறருக்கு உதவுவதில் ஆர்வ முடையவர்களாகவே என்றும் இருப்பர். தன் குடும்பத்தினருக்காக எந்தத் தியாகத்தையும் செய்வார்கள்.

கூர்மையான அறிவும் உழைப்பும் இயற்கையாகவே உடையவர்களானதால் சிறு வயதிலேயே புத்திசாலி என்று பெயரெடுப்பர். சுறுசுறுப்புடைய இந்த எண்ணின் கீழ் பிறந்த சிறுவர் சிறுமியர் வகுப்பில் முதன்மையாகவே காணப்படுவர். சிறு வயதிலேயே தன் பொறுப்பை உணர்ந்து யாவரும் மெச்சும்படி நடந்து கொள்வார்கள். இவர்களில் அநேகர் மிகச் சிறுவயதிலேயே குடும்ப பாரத்தை ஏற்கின்றனர். தர்மம் புரிதல் போன்ற விஷயங்களிலும், தானாக புதிதாக ஒரு தர்ம ஸ்தாபனத்தையும் ஆரம்பிக்க இவர்களுக்கு ஆர்வமிராது. சரியாக நடந்து கொண்டிருக்கும் ஸ்தாபனங்களுக்கே உதவுவார்கள். குடும்ப கௌரவம், தேச கௌரவம் இவைகளுக்காகப் போராடக் கூடிய இவர்கள் ஒருநாளும்  கௌரவத்தைப் பாதிக்கக் கூடிய காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.

×
×

Cart